ஹைதராபாத்: கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி நள்ளிரவில், கட்டளை அதிகாரி, சுபேதார், ஹவில்தார் மற்றும் சிப்பாய் என 20 வீரர்களை இழந்தோம்.
அன்றைய தினம் சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால் இந்திய வீரர்கள் ஆயுதங்களை பிரயோகிக்க முடியவில்லை.
இந்நிலையில் திபுதிபுவென புகுந்த சீன துருப்புகள் இந்திய வீரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தின. கணநேரத்தில் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அந்நேரத்தில் பிகார் ரெஹிமெண்ட் படைபிரிவினரின் வேகம் சீன வீரர்களை நிலை குலைய செய்தது.
இந்தப் படை பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு இருந்தார். அவரும் இத்தாக்குதலில் வீர மரணத்தை அடைந்தார்.
சீன வீரர்களின் இந்தக் கொடூரத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் எய்தினர். அவர்களில் பெரும்பாலானோர் பிகார் ரெஹிமெண்ட் படைபிரிவை சேர்ந்தவர்கள். மேலும், தமிழ்நாடு (பழனி), பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இவர்கள் தவிர 17 பேர் காயமுற்றனர்.
இந்தத் தாக்குதலில் சீன தரப்பில் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 60க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறின.
சீன வீரர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதில் கர்னல் சந்தோஷ் பாபுவின் திட்டம் முக்கியமானது. இவரின் படையை எதிர்த்து சீனாவில் மேலும் உள்ளே நுழையமுடியவில்லை.
இவரின் தியாகத்தை போற்றும் வகையில் மத்திய அரசு இராணுவத்தின் இரண்டாவது உயர்ந்த மரியாதையான மகாவீர் சக்ரா வழங்கி கௌரவித்தது. வீரர்கள் நாயிப் சுபேதார், நுடுராம் சோரன், ஹவில்தார் கே பழனி, நாய்க் தீபக் சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
சீன துருப்புகளுக்கு எதிரான போரில் தங்களின் இன்னுயிரை இழந்து நாட்டை காக்க காவல் தெய்வங்களின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு அந்ததந்த மாநில அரசுகளும் தனித்தனி நிவாரணங்கள் மற்றும் உதவிகள் வழங்கின.
அதன்படி சந்தோஷ் பாபுவின் மனைவி தெலங்கானா அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியது. தமிழ்நாடு அரசு பழனியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளித்ததுடன், அவரது மனைவிக்கும் அரசு வேலை வழங்கியது.
பஞ்சாப் அரசு 5 வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகள் அளித்தது. பிகார் முதலமைச்சர் நிவாரணங்கள் அறிவித்தார். அதேபோல் மேற்கு வங்க அரசும் நிவாரணம் வழங்கியது.