புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்ஸிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் இல்லை. அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் வேலையை மாநில நிர்வாகம் துரிதமாக செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் அறிவித்து அதை விநியோகித்து வருகிறார். அதேபோல், புதுச்சேரியில் வசதியுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ராஜிவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொலை செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சிகள், பொது நலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.
ஆனால், காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.