நாக்பூர்: ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற அமைப்புகளை ஒழிக்க பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சல் அமைப்பில் இணைந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு அறிவுரை வழங்கி அவர்களை திருத்தும் பணியிலும் போலீசார் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், நக்சல் அமைப்பில் இருந்து வெளியேறிய சிறுமி ஒருவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாக்பூர் அருகே நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியான கட்சிரோலி கொண்டியா பகுதியில், காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் சந்தீப் அடோல். பொறுப்பேற்ற உடன் நக்சல்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். நக்சல் அமைப்பினர் நடத்திய தாக்குதல் சம்பவம், குற்றவாளிகள் குறித்தும் விசாரணை நடத்தினார்.
அப்போது 15 வயதே ஆன, ரஜூலா ஹிடாமி என்ற சிறுமி நச்கல் இயக்கத்தில் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல், கொள்ளை உட்பட 6 வழக்குகள் ரஜூலா மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது அந்த சிறுமியை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தார் காவல் கண்காணிப்பாளர் சந்தீப்.
இந்நிலையில் சிறுமி ரஜூலாவை சந்தீப் சந்தித்து பேசினார். பயங்கரவாதத்தில் ஈடுபடுவது தவறு என்றும், நக்சல் இயக்கத்தில் இருந்து வெளியேறி கல்வியில் கவனத்தை செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார். பலமுறை சந்தித்து ரஜூலாவின் மனதை மாற்றினார் சந்தீப். இதன் பிரதிபலனாக தன்னிடம் இருந்த ஆயுதங்களுடன் கடந்த 2018ம் ஆண்டு போலீசாரிடம் சரணடைந்தார் ரஜூலா. மகிழ்ச்சியடைந்த காவல் கண்காணிப்பாளர் சந்தீப், சிறுமி கல்வி பயில முயற்சி செய்தார். ரஜூலாவின் தந்தை காலமான நிலையில், அவரது தாய் மறுமணம் செய்து கொண்டது தெரியவந்தது. நக்சல் இயக்கத்தில் இணைந்ததால், உறவினர்களும் ரஜூலாவை கைவிட்டனர். இதையடுத்து தன் பிள்ளை போல் அவரை படிக்க வைத்தார் சந்தீப்.
தற்போது நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 45.83 சதவீத மதிப்பெண்களுடன் ரஜூலா தேர்ச்சி பெற்றுள்ளார். வாழ்க்கையில் தாம் முன்னேற காவல் கண்காணிப்பாளர் சந்தீப் மற்றும் சக நண்பர்களே காரணம் என உருக்கத்துடன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறையில் இணைந்து சேவை செய்வதே தனது லட்சியம் என்றும் ரஜூலா கூறியுள்ளார்.
நக்சல் இயக்கத்தில் இருந்த சிறுமியை அதில் இருந்து வெளியேற்றி நல்வழிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் சந்தீப்பின் செயல், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.