கர்நாடகா: மைசூர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். மைசூர், சாமுண்டி மலை அருகே நடைபெற்ற இச்சம்பவத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக தனது காதலருடன் சாமுண்டி மலைக்குச் சென்று விட்டு அப்பெண் திரும்பிய நிலையில், மது அருந்தி விட்டு அவ்வழியே சென்ற கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து, பெண்ணின் காதலரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது இவ்விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலரின் அறிக்கையின் அடிப்படையிலும், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் துறையினர் வெவ்வேறு மாநிலங்களில் கைது செய்துள்ளனர்.
அந்நபர் குறித்த அடையாளங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலரிடம் இதுகுறித்து விசாரிக்க உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் இச்சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டார்கள், எங்கு கைது செய்யப்பட்டார்கள் என்பன குறித்து டிஜிபி பிரவீன் சூட் இன்று (ஆக.28) மாலை செய்தியாளர்கள் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை திருமணம் - தடுத்து நிறுத்திய அலுவலர்கள்