மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
மைசூரு, சாமுண்டி மலை அருகே தனது ஆண் நண்பருடன் சாமுண்டி மலைக்குச் சென்று விட்டு அப்பெண் திரும்பிய நிலையில், மது அருந்தி விட்டு அவ்வழியே சென்ற கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து, பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
5 பேர் கைது
இப்பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக ஹால்நள்ளி காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து, 84 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் உள்பட ஐந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் அந்த பெண்ணை பணையம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே தோழரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
தலைமறைவு - கைது
இந்த குற்றச்செயலில் அவர்களுடன் மேலும் இருவர் ஈடுபட்டதாக கூறிய நிலையில், அதில் ஒருவரை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு காவல்துறையினர் கைது செய்தனர்.
நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த ஏழாவது குற்றவாளியை நேற்று (செப். 7) தனிப்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஏழாவது குற்றவாளி, குற்றம் நடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு பின் செல்ஃபோனை ஸ்விட்ச்-ஆஃப் செய்து சாமுண்டி மலைகளுக்கு அருகே தலைமறைவானார். அவரின் நண்பர்கள், உறவினர்களை கண்காணித்து அவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
விசாரிக்க அனுமதி
முன்னதாக, கைதுசெய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளை நேற்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற ஐந்து பேரை மைசூரு மத்திய சிறையிலும் காவலர்கள் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு உடல்நிலை இன்னும் சீராகவில்லை என்பதால் அவரிடம் வாக்குமூலம் வாங்கவில்லை என்றும் அவரை கட்டாயப்படுத்த இயலாது என்றும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் இருந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அப்பெண் குற்றவாளிகளை புகைப்படம் மூலம் அடையாளம் காண்பித்துள்ளதை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
இவ்விவகாரத்தை கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்து, விசாரணையை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, குற்றச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சரை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி