மைசூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறும் என உறுதியாகத் தெரிவித்த சித்தராமையாவின் மகனான யதிந்திரா, பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்ட எது வேண்டுமானாலும் செய்வோம் என்றார். ஆனாலும் கர்நாடக மக்களின் விருப்பப்படி எனது தந்தையே முதலமைச்சராக வேண்டும் எனவும் யதிந்திரா சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.
வருணா தொகுதியில் போட்டியிடும் தனது தந்தையான சித்தராமையா பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக் கூறிய யதிந்திரா, யாருடைய ஆதரவுமின்றி காங்கிரஸ் ஆட்சியமைக்கும் எனக் கூறினார்.
சித்தராமையாவின் கடந்த கால ஆட்சி சிறந்த நிர்வாகத்திற்கு உதாரணம் எனக் கூறிய அவர், இம்முறையும் அவரே முதலமைச்சராக வேண்டுமென்பது கர்நாடக மக்கள் மற்றும் ஒரு மகனாகத் தனது விருப்பமும் கூட எனக் கூறினார். கடந்த 10ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சில தொங்கு சட்டமன்றத்திற்கு வாய்ப்புள்ளதாகக் கணித்தன.
பொதுவாக அனைத்து கருத்துக்கணிப்புகளுமே பாஜகவுக்கு எதிராக இருந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக மாநிலத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டது. 1985 ம் ஆண்டுக்குப் பின்னர் கர்நாடகாவில் ஒருபோதும் ஆட்சியிலிருக்கும் கட்சி தேர்தலில் வென்றதில்லை. இந்த 38 ஆண்டுக் கால வரலாற்றை மாற்ற முனையும் வகையில், பாஜக கடுமையான போட்டியை அளித்தது.
இதற்குச் சவால் விடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜன கார்கே உள்ளிட்டோரும் பல்வேறு பிரசார பயணங்களில் ஈடுபட்டு ஆதரவு திரட்டியிருந்தனர். கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது போலவே, காங்கிரஸ் கட்சி 115 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வருவதால், யார் முதலமைச்சர் என்ற விவாதம் வழக்கம் போலத் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.