லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இஸ்லாமிய ஆண் ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் 2ஆவது திருமணம் செய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட மனைவி மாவட்ட நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுகொண்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த ஆண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று (அக். 11) நடந்தது. அப்போது நீதிமன்றம், மனுதாரர், தனது முதல் மனைவியிடமிருந்து 2ஆவது திருமணத்தை மறைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2ஆவது திருமணத்தில் முதல் மனைவிக்கு விருப்பமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மீண்டும் சேர்ந்து வாழும்படி அவரை கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி கட்டாயப்படுத்தினால், அது இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதிகள் சூர்ய பிரகாஷ் கேசர்வானி மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.
இதையும் படிங்க: "குழந்தையின் நலனே முக்கியம்" - 10 மாத குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுப்பு...!