நாளுக்கு நாள் மத கலவரம், வன்முறைச் சம்பவங்கள், வெறுப்பு பரப்புரைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில், இந்து - இஸ்லாமியர் இடையே நல்லிணக்கத்தை போதிக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளது.
அதுமட்டுமின்றி, லட்சுமி மற்றும் கணபதி ஆகியோரை அவர்கள் வழிபட்டுள்ளனர். இம்மாதிரியான திருவிழாக்களின் மூலம் மத நல்லிணக்கத்தை வளர்க்க முடியும் என அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நம்புகின்றனர். உத்தரப் பிரதேசம் ஏடிஏ காலனியில் லட்சுமி மற்றும் கணபதி பூஜையை நடத்திய ரூபி ஆசிப் கான், தனது வீட்டை விளக்குகளால் அலங்கரித்தார்.
ரூபி குடும்பத்துடன் சேர்ந்து மற்ற இஸ்லாமிய குடும்ப பெண்களும் லட்சுமி பூஜையில் கலந்து கொண்டனர். லட்சுமி பூஜையை தொடர்ந்து அவர்கள் தீபாவளியை கொண்டாடினர். இது குறித்து ரூபியின் கணவர் ஆசிப் கான் கூறுகையில், "கடந்த 21 ஆண்டுகளாக தீபாவளியன்று எனது மனைவி கணபதி பூஜை நடத்தி வருகிறார்.
முதலாமாண்டு கொண்டாடியபோது ஒரு விளக்கையும், இரண்டாவது ஆண்டு இரண்டு விளக்கையும் ஏற்றிய அவர், 21 ஆவது ஆண்டை முன்னிட்டு 21 விளக்குகளை ஏற்றினார். இந்து - இஸ்லாமியர் இடையே ஒற்றுமையை போதிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது" என்றார்.