மும்பை: கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், மும்பையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், கரோனா நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று உதவிவருகிறார்.
ஆசிரியர் தத்தாத்ரேயா சாவந்த் தானாகவே ஆட்டோவை ஓட்டுகிறார், மேலும் கரோனா நோயாளிகளுக்கு இலவச சவாரி அளிக்கிறார், அதே நேரத்தில் பிபிஇ கிட் அணிவது, சுத்திகரிப்பு, பிற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறார்.
காட்கோபர் பகுதியில் வசிக்கும் சாவந்த், தியன்சாகர் வித்யா மந்திர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார்.
மாநிலம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா நோயாளிகளைக் கருத்தில்கொண்டு, சாவந்த் கடந்த சில நாள்களாக வடகிழக்கு மும்பையில் இந்தச் சேவையை வழங்கிவருகிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் கரோனா நோயாளிகளை கோவிட் பராமரிப்பு மையம், மருத்துவமனையில் இலவசமாக இறக்கிவிடுகிறேன்.
மேலும் மருத்துவமனை, கோவிட் மையத்திலிருந்து வெளியேறும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறினார்.
அவர் இதுவரை 26 கரோனா நோயாளிகளுக்கு இலவச பயணத்தை வழங்கியுள்ளார், மேலும் அவரது பணி அனைத்து மட்டங்களிலும் பாராட்டப்பட்டுவருகிறது.
மேலும் அவர் பேசுகையில், "இதற்காக, நான் தனிப்பட்ட முறையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறேன். தற்போது, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
அவர்களில் பலர் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெறாததால் இறந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், ஏழை நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் அரசின் உதவி கிடைக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை.
பெரும்பாலும் பொது வாகனங்கள் கோவிட் நோயாளிகளுக்குச் சேவைகளை வழங்குவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், எனது இலவச சேவை நோயாளிகளுக்கு கிடைக்கிறது" என்றார்.
கரோனா அலை நீடிக்கும்வரை இந்தச் சேவை தொடரும் என்றும் சாவந்த் குறிப்பிடுகிறார்.
பலர் சாவந்திற்கு நிதி உதவி அளித்துவருகின்றனர். பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகம் (எம்.சி.ஏ.) சாவந்தின் ஆட்டோவிற்குண்டான எரிபொருள் செலவு முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.