விளம்பரதாரர்களை கவர்ந்திழுக்க சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டி.ஆர்.பி) முறைக்கேடான வழியில் உயர்த்திவரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (பி.ஏ.ஆர்.சி) கடந்த மாதம் வெளிப்படையாக குற்றச்சாட்டியது. இதனையடுத்து, சில சேனல்கள் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டுவந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
அத்துடன், பார்வையாளர்களின் தரவுகளை சேகரிக்க சில வீடுகளில் நிறுவப்பட்ட மீட்டர்களை கண்டறிந்த பி.ஏ.ஆர்.சி, அந்த சேனல்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு குறிப்பிட்ட வீடுகளுக்கு லஞ்சம் வழங்கியது போன்ற மோசடியில் ஈடுபட்டதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது.
இந்த மோசடி தொடர்பாக ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட் புகார் அளித்தது. அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த மும்பை பெருநகர காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில், ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று சேனல்கள் டி.ஆர்.பி. தரவரிசையை உயர்த்திக் காட்டிட முறைகேடான வழிகளைக் கைக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அலுவலர் (சி.எஃப்.ஓ) சிவ சுப்ரமணியம் சுந்தரம், மாடிசன் வேர்ல்ட் மற்றும் மேடிசன் கம்யூனிகேஷன்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சாம் பல்சரா உள்ளிட்ட 12 பேரை குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.யூ) காவலர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில், டி.ஆர்.பி. மோசடி வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை மும்பை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
டி.ஆர்.பி மோசடி வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அமலாக்க இயக்குநரகம் (இ.டி) பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து, விசாரணையில் இறங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தி வோல் நேசன் வான்ட்ஸ் டூ நோ - ரிபப்ளிக் டிவி செய்த டி.ஆர்.பி முறைகேடு!