கடந்த 2018ஆம் ஆண்டு, 53 வயது கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அவரது வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தனது அத்தை, மாமா, மகன், மனைவி ஆகியோர் மும்பை காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக அர்னாப் கோஸ்வாமி கைது செய்யும் போது ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மும்பை காவல் துறை கோஸ்வாமியை அழைத்துச் செல்ல முயற்சித்தபோது கோஸ்வாமி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக்கள் மூலம் தெரியவருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு, அன்வே நாயக், அவரின் தாயார் குமுத் நாயக் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி தனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தற்கொலை கொள்வதாக அன்வே நாயக் தற்கொலை செய்யும்போது எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்வே நாயக்கின் மகள் அத்நயா நாயக் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்கப்பட்டது. ஏற்கெனவே, டிஆர்பி முறைகேட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஈடுபட்டதாக மும்பை காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.