டெல்லி: மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டின் வெளியே கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் நிறைந்த கார் தொடர்பான வழக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் டெல்லியின் திகார் சிறைக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் காவல் துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில், அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வரும் காவல் துறையினர், தற்போது அதிகாரப்பூர்வ தகவல்களை உறுதிப்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சைபர் ஏஜென்சியின் விசாரணையில், இந்த விவகாரத்தில் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் குழு பயன்படுத்திய டெலிகிராம் எண் திஹார் சிறையில் உள்ள குழுவினரால் உருவாக்கப்பட்டது. மேலும், மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டின் இருப்பிடம், ஜெய்ஷ்-உல்-ஹிந்த் குழுவினரின் இருப்பிடத்துடன் ஒத்துள்ளது. இது டார்க் நெட் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
ஜெலட்டின் குச்சிகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு, 'இந்தச் சம்பவம் ஒரு டிரெய்லர் மட்டுமே. படம் இன்னும் வரவில்லை' என்று டெலிகிராமில் ஒரு செய்தியை அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.