ஜபல்பூர்: மாம்பழம் பழங்களின் அரசன். உலகம் முழுவதும் ஏராளமானோரால் விரும்பி சாப்பிடக்கூடியது. ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஒரு கிலோவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'டையோ நோ தம்காவ்' உலகில் மாம்பழங்களில் மிகவும் விலை உயர்ந்தது.
இந்த வகை மாம்பழங்கள் ஜப்பானில் காணப்படுகின்றன. அதற்காக அதனை வாங்குவதற்கு நாம் அங்கு செல்ல வேண்டும் என்று பொருள் இல்லை; இது நமது நாட்டின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரிலும் கிடைக்கிறது.
இந்தச் சிறப்பு மாம்பழங்களை சூரியனின் முட்டை என்றும் அழைக்கிறார்கள். இதன் வகைகளைப் பற்றியும் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஜபல்பூரில் உள்ள சார்வான் சாலையில் உள்ள சங்கல்ப், ராணி பாரிக்கர் தோட்டத்தில் 14 வகையான மாம்பழங்கள் உள்ளன. டையோ நோ தம்காவ் மரங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு மரத்தில் குறைந்தது 20 வகையான மாம்பழங்களுடன் தொடர்ந்து பழங்களைத் தந்துவருகின்றன.
ராணி பாரிக்கர் கூறுகையில், "இந்த மாம்பழத்தை வளர்ப்பது சவாலானது, ஏனெனில் இது மிகக் குறைந்த பழங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அவை இந்தியாவில் நல்ல விலையைப் பெறுவதில்லை" என்றார்.
![ராணி பாரிக்கர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12055854_581_12055854_1623140615966.png)
ஆனால் அவர் இந்த மாம்பழத்தை ஒரு பொழுதுபோக்காக வளர்த்தார்; வெற்றிபெற்றார். ஜப்பானில், இந்த மாம்பழம் வீட்டுக்குள் வளர்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் இதை திறந்த வெளியில் வளர்க்கலாம்.
மாம்பழத்தில் நார் இருக்காது, ஆனால் மிகுந்த சுவையாக இருக்கும் என்று ராணி பாரிக்கர் கூறுகிறார். அவரது தோட்டத்தில் பல பொதுவான ஜப்பானிய மாம்பழங்களும் உள்ளன. இவற்றில் ஊதா, இளஞ்சிவப்பு மாம்பழங்கள் அடங்கும். மாம்பழம் 2 கிலோகிராம் என்ற பெயரில் தோட்டத்தில் மற்றொரு வகை மாம்பழமும் உள்ளது, ஏனெனில் அது பழுத்தவுடன் சுமார் 2 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், அனைத்து வகையான உள்நாட்டு, வெளிநாட்டு பழங்களும் இங்கு திறந்த சூழலில் வளர்க்கப்படுகின்றன.
இந்த விலையுயர்ந்த மாம்பழங்களை வளர்ப்பதில் சவாலுக்குப் பஞ்சமில்லை என்றேதான் சொல்ல வேண்டும். திருடர்கள் கண் எப்போதும் தோட்டத்தை நோட்டமிட்டபடியே இருக்கும். விலையுயர்ந்த மாம்பழங்களைத் திருடி அவற்றை சில்லறைகளுக்கு விற்கிறார்கள்.
தங்களில் ஒருவர் 24 மணி நேரமும் தோட்டத்தின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று சங்கல்ப் பாரிக்கர், ராணி பாரிக்கர் கூறுகிறார்கள்.
"அல்போன்சோ, நூர் ஜஹான், மல்லிகா, தசரா உள்ளிட்ட வகையான மாம்பழங்கள் தங்கள் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. பழங்களின் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக உள்ளது. இந்தப் பகுதியின் சூழல் மா உற்பத்திக்கு ஏற்றது" என்று சங்கல்ப் பாரிக்கர் கூறுகிறார். ஆனால் அரசின் தோட்டக்கலைத் துறை இது குறித்து கவனம் செலுத்தவில்லை, இதனால் உற்பத்தி சிறு விவசாயிகளைச் சென்றடைவது கடினம்.
பாரிக்கர் கூறுகையில், அவர்கள் அரசிடமிருந்து ஒரு சிறிய ஆதரவைப் பெற்றால் இந்தப் பகுதியின் ஏழை விவசாயிகளின் நிலை மாறக்கூடும் என்றார்.