இந்தூர்: ஹாங்காங்கில் வசித்து வந்த சர்பராஸ் மேமன் என்ற தீவிரவாதி மும்பைக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர் தீவிரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, மகாராஷ்ரா உள்பட அனைத்து மாநில காவல்துறைக்கும் என்ஐஏ எச்சரிக்கை விடுத்தது.
சர்பராஸ் மேமன் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி பெற்றவர் என்றும் என்ஐஏ தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று(பிப்.28) காலை முதல் மும்பை, இந்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சர்பராஸ் மேமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை போலீசாரும் சர்பராஸ் மேமனிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்தூர் போலீசார் கூறும்போது, "சர்பராஸ் குடும்பத்தினர் இந்தூரின் கிரீன் பார்க் காலனியில் வசித்து வருகின்றனர். அவரைத்தேடி வீட்டிற்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை. இதனால் அவரது பெற்றோரை கைது செய்தோம். இதையடுத்து சர்பராஸ் காவல் நிலையத்திற்கு வந்தார். உடனடியாக அவரை கைது செய்தோம்.
அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில், அவர் சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு 15 முறை சென்று வந்தது தெரியவந்தது. அவர் பல மாநிலங்களில் போலியான அடையாளங்களுடன் தங்கி இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், வேலைக்காகவே ஹாங்காங்கில் இருந்ததாகவும் சர்பராஸ் பொய் கூறுகிறார்" என்று கூறினர்.
இதையும் படிங்க:உமேஷ் பால் கொலையில் தொடர்புடைய நபரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!