பொதுவாக எருமைகள் எல்லாம் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும். அதிலும், நீர் எருமை என்றால் சற்று புத்திசாலித்தனமாக இருக்கும் என நம் சிறுவயதிலிருந்தே பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம்.
மத்தியப்பிரதேசத்தில் மிகப் பிரபலமான இடம், பந்தவ்கர். இங்கு புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட மைய மண்டலத்தில், ஆறு எருமைகள் சேர்ந்து புலியை விரட்டியடித்து உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றியது.
தைரியமான எருமைகள்
பந்தவ்கரில் புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியின் மைய மண்டலத்தில் அடர்ந்த காடுகள் அமைந்துள்ளது. அதன் சுற்றுவட்டாரத்தில் கோத்தயா பனபாதா பகுதியைச் சேர்ந்தவர் லல்லு யாதவ் என்கிற விவசாயி. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் கூடுதல் வருமானத்திற்காக சில எருமைகளை வளர்த்து வருகிறார்.
பதுங்கியிருந்து தாக்கிய புலி
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அன்று காலை 6 மணிக்கு யாதவ் வழக்கம்போல, தனது எருமைகளுக்கு உணவளிக்க காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
நாள் முழுவதும் வேலை செய்தபின், சோர்வடைந்த லல்லு அருகிலுள்ள குழாயில் தண்ணீரைக் குடித்துவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பதுங்கியிருந்த புலி ஒன்று வியாபாரி லல்லுவைத் தாக்கியது.
எருமைகளால் விரட்டியடிக்கப்பட்ட புலி
பின்னர், லல்லுவின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்து ஆறு எருமைகள் ஓடி வந்தன. உடனே, லல்லுவைத் தாக்க முயன்ற புலியை ஆறு எருமைகள், சுற்றி வளைத்து உரக்க சத்தம் போட்டு தடுத்தன.
எருமைகளிடம் சத்தத்தைப் பார்த்த புலியின் உறுமல் சற்று நேரம் அடங்கியது. சுமார், 10 நிமிடங்கள் புலி அப்படியே அசையாமல் நின்றது. பின்னர் அங்கிருந்து தப்பியோடியது. பின்னர், விவசாயி லல்லு சிறு காயங்களுடன் தப்பித்தார்.
உயிர் தப்பிய வியாபாரி
இதையடுத்து, லல்லு மான்பூரின் மருத்துவ சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தோள்பட்டை மற்றும் தாடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நல்வாய்ப்பாக உயிர் தப்பித்தார்.
இதையும் படிங்க: மகள், மருமகன் எனக் குடும்பத்தோடு கரோனா பாதிப்புக்குள்ளான முதலமைச்சர்!