மத்தியப் பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பராசியா தாலுகா அருகே உள்ள கிராமத்தில் நேற்று (டிசம்பர் 23) மதியம் ஒரு துயரச் சம்பவம் ஒன்று நடந்தேறியது. கோஹ்கா தாமுவா கிராமத்தில் தர்ஷத் கக்கோடியா என்பவரின் 12 வயது மகன் ருக்மன்ஷா தனது மூத்த சகோதரியுடன் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடி வந்துள்ளார்.
அவரின் சகோதரி தொடர்ந்து கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்க, ருக்மன்ஷா மொபைல் போனை சகோதரியிடமிருந்து கேட்டுள்ளார். ஆனால், அவனுடைய சகோதரி மொபைல் போனை தர முடியாது எனக் கூறி தொடர்ந்து விளையாடிவந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தும் மொபைலை தராததால், ருக்மன்ஷா உணர்ச்சி வேகத்தில் வேறு அறைக்குச் சென்று, அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டது நீண்ட நேரம் யாருக்கும் தெரியாது. பின்னர், வீடு திரும்பிய தந்தை தர்ஷத், தனது மகனைத் தேடியபோது, அவர் தூக்கிட்டு உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இத்தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு மருத்துவர்களோடு விரைந்துவந்தனர். அங்கு சிறுவனுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்ட பின், அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சகோதரி மொபைல் போன் தராததால் உணர்ச்சி வேகத்தில் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?