திருப்பதி: திருமலை - திருப்பதியில் ஶ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் அருகே, தேவஸ்தானத்திற்கு சொந்தமான எல்இடி திரை உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள இத்திரையில், வழக்கமாக திருப்பதி ஏழுமலையானின் பக்திப் பாடல்கள் ஒளிபரப்பாகும். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, எல்இடி திரையில் திடீரென இந்தி சினிமா பாடல் ஒளிபரப்பானதால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு, சினிமா பாடலும், விளம்பரங்களும் ஒளிபரப்பானதாகத் தெரிகிறது. தேவஸ்தான நிர்வாகம் முறையாக கண்காணிக்காததன் காரணமாகவே சுமார் 30 நிமிடங்கள் சினிமா பாடல் ஒளிபரப்பானது எனப் பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக தேவஸ்தான அலுவலர்களிடம் கேட்டபோது, "செட்டாப் பாக்சில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சினிமா பாடல் ஒளிபரப்பானதாகவும், உடனடியாக இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும்'' தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோ பேக் அமித்ஷா.. புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு