லக்னோ: குடிப்பழக்கத்தால் தனது மகன் உயிரிழந்ததிலிருந்து புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தை மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் வரும் ஆண்டை போதையில்லா ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் நேற்று நடைபெற்ற போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிரான கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவில் 272 மாவட்டங்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது என அரசு அடையாளம் கண்டுள்ளது. போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்ட வேண்டும். விரைவில் இந்த நாடு புகையிலை மற்றும் மதுவிலக்கு இல்லாத நாடாக மாறும்” என்றார்.
தொடர்ந்து குடிப்பழக்கத்தால் உயிரிழந்த தனது மகன் குறித்துப் பேசிய அவர், “எனது மகனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனைச் சரி செய்ய அவனைப் போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்தோம். பின்னர் அவன் திருந்தியதாக நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவன் மாறவில்லை. திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், இந்த குடிப் பழக்கத்தின் காரணமாகச் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்ததால் உயிரிழந்தான். என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை” என வேதனை தெரிவித்தார்.
மேலும், “போதை அடிமையாகி இருக்கும் ஒருவருக்குப் பெண்களைப் பெற்றோர் திருமணம் செய்து வைக்காதீர்கள். நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்க சுமார் இருநூறு வருடங்கள் ஆனது. அதே வழியில், போதைப்பொருளை உலகிலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்தால், அதை அடைய 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்