கரோனா ஊரடங்கு, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் முக்கியமான ஒன்று வேலையிழப்பு. பெரும்பாலான துறைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர்.
இந்த நிலையில், ஊரடங்கு போடப்பட்டிருந்த 2020-ம் ஆண்டில், சுற்றுலாத் துறையில் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 2.1 கோடிக்கும் மேற்பட்ட நேரடி ஊழியர்கள் வேலை இழந்ததாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, சுற்றுலாத்துறையில் 2020-ல் ஏற்பட்ட வேலை இழப்பு, அதற்கு முந்தைய ஆண்டில் சுற்றுலாத் துறையில் இருந்த மொத்த வேலைவாய்ப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகம் என குறிப்பிட்டார்.
முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும், கரோனா பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் சுற்றுலா மற்றும் பயணம் செல்வதை தவிர்த்து வந்தனர். இதனால், சுற்றுலாத்துறை மற்றும் அதைச் சார்ந்திருந்த தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 2020 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, ஒரு கோடியே 45 லட்சம் நேரடி ஊழியர்கள் வேலை இழந்ததாகவும், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 52 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 18 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா முழு ஊரடங்கு காரணமாக, 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சுற்றுலாத்துறையில் 93.3 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு