மகாராஷ்டிரா:பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில் இருந்து 10 கி.மீ தொலைவில் லவுல் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஒன்றரை மாதமாக மூன்று குரங்குகள் காணப்படுகின்றன. இந்த குரங்குகள் கிராமத்தில் உள்ள நாய்க்குட்டிகளை உயரமான மரங்கள் அல்லது வீடுகளிலிருந்து தள்ளி விடுகின்றன. இதனால் நாய்க்குட்டிகள் அந்த இடத்திலேயே இறந்து விடுகின்றன.
பாதிப்பு
இந்தக் குரங்குகள் 125 நாய்க்குட்டிகளைச் சாகடித்துள்ளதாகக் கூறுகின்றனர், 15 நாட்களுக்கு முன்பு, கிராமவாசி சீதாராம் நைபாலின் நாய்க்குட்டியை இந்த குரங்குகள் தூக்கி சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மொட்டை மாடிக்குச் சென்ற சீதாராம், நாய்க்குட்டியை மீட்க முயன்றபோது குரங்குகள் அவரை நோக்கி ஓடி வந்தன. இந்த அதிர்ச்சியில், அவர் நிலை தடுமாறி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், குரங்குகள் தாக்கியதில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இது குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், வனத்துறை அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், வனத்துறையினர் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் அது பலன் அளிக்கவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த குரங்கு குட்டியை நாய் தாக்கி கொன்றது. இதனால் குரங்குகள் நாய்க்குட்டிகளை கொன்று வருவதாகக் கூறுகின்றனர்.
மனிதர்களையும் தாக்கும் குரங்குகள்
குரங்குகளின் இந்தச் செயல் குறித்து விலங்கு ஆர்வலர் சித்தார்த் சோனாவனிடம் கேட்டபோது, ”குரங்குகள் நாய்க்குட்டிகளை கைகளில் எடுத்துக்கொண்டு மரத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ சென்று முடிகளில் உள்ள சிறு பூச்சிகளை சாப்பிடுகின்றன. பிறகு நாய்க் குட்டிகளை உயரமான இடங்களிலிருந்து விட்டு விடுகின்றன. இதனால், மரத்தில் இருந்து தவறி விழுந்து நாய்க்குட்டிகள் இறந்து விடுகின்றன. மனிதர்கள் குரங்குகளின் செயல்களை தடுக்கும்பட்சத்தில் அவை மனிதர்களையும் தாக்குகின்றன” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாதுகாப்புப் படையிடம் சிக்கிய ட்ரோன்: பாகிஸ்தானின் உளவு வேலையா?