உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அனுபவிக்கும் அழகான உணர்ச்சிதான் காதல். முகம் பார்த்து மலரத் தொடங்கிய காதல், தற்போதைய டிஜிட்டல் உலகில் ஆன்லைனில் மலருகிறது.
ஆன்லைன் காதலால் அரங்கேறிய மோசடி கதைகள் பலவற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால், உண்மையான காதலும் மலரும் என்பதை பிகாரைச் சேர்ந்த காதல் ஜோடி நிகழ்த்திக் காட்டியுள்ளது.
முகமது சதாம் - ஆயிஷா இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக இருந்துள்ளனர். நாளடைவில் இவர்களின் நட்புப் பயணம் காதலாக மாறியுள்ளது. சற்றும் யோசிக்காமல் அடுத்த ஸ்டேஜான திருமணத்திற்கும் முன்னேறிவிட்டனர். இவையெல்லாம், வெறும் ஐந்து மாதங்களில் நடைபெற்றதுதான் காதல் கதையின் ருசிகரம்.
உத்தரப் பிரதேசத்தில் மீரட் பகுதியில் வசிப்பவர் ஆயிஷா. இவர் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல், ஆன்லைன் காதலன் முகமதுவைத் தேடி பிகாரில் உள்ள அரரியா கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஆயிஷாவின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக சமூகத்தில் பெரிய இடத்தில் உள்ளவர்கள். அவர்கள் நிச்சயம் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதை நன்கு அறிந்த ஆயிஷா, திரும்பிச் செல்ல மனமின்றி முகமதுடனே இருந்துள்ளார்.
இதையறிந்த அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் குமார் மண்டல், இருவரையும் அழைத்துப் பேசியுள்ளார். ஆயிஷாவுக்கு தனது விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளும் வயது வந்துவிட்டதை அறிந்த அவர், இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துவைத்தார்.
காதலனுடன் சேருவதற்காக, மீரட்டிலிருந்த வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு, பிகார் கிராமத்தில் தனது இல்லற வாழ்க்கையை நடத்திவரும் ஆயிஷா-முகமது காதல் கதை வியப்படையச் செய்கிறது.
இதையும் படிங்க: ஏப்ரல் ஃபூல் பண்றீங்கனு நினைச்சோம்... கிராமத்தினர் அலட்சியத்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்