மத்திய பிரதேசத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5 லட்சத்து 21 ஆயிரம் வீடுகளுக்கான கிரகப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இரண்டரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் இரண்டு கோடி வீடுகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் உள்ள ஏழைகள் பெரிதும் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல் நல்-ஜல் (Nal-Jal)திட்டத்தின் மூலம் நாடு முழுவதும், ஆறு கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புடன் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஏழை மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவு தானியங்கள் திருடப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடியில் உள்ள குடிமகனுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதே மத்திய பாஜக அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் 75-வது சுதந்திரதினத்தை குறிப்பிடும் வகையில், அடுத்த 12 மாதங்களுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 75 குளங்களை கட்டுவதற்கு மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டிற்கு இருக்கும் கடன்சுமையில் ஆடம்பர அரசு விழாக்கள் அவசியமா?- மநீம செந்தில் ஆறுமுகம்