லக்னோ: உத்தர பிரதே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பேருந்துகள் சாலைகளில் பயணிக்கும்போது உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். ஆனால், இந்த சோதனை நடைபெறுவது குறித்தும், அதிகாரிகள் எந்த இடத்தில் சோதனை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் ஒரு பேருந்தில் இருந்து மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு செல்ஃபோன் மூலமாக தகவல் பகிரப்படுவதாக புகார் எழுந்தது.
இதனால் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில் உண்மை தன்மை ஏற்பட வாய்ப்பு குறைந்த நிலையில் இதுபோன்ற செயல்களில் பேருந்து ஓட்டுநரோ அல்லது நடத்துநரோ செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் செல்ஃபோன்களை ஆய்வு செய்யவும், ஆய்வு செய்யும்போது அதை வீடியோவாக பதிவு செய்து போலீசாரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்
அது மட்டுமின்றி இந்த உத்தரவை கடைபிடிக்காமலோ, ஆய்வு செய்ய செல்ஃபோன்களை தர மறுத்தாலோ அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து பேசியுள்ள அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங், “இந்த உத்தரவை அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். அப்படி செய்யாதவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் தனிமனித உரிமை மீறலில் ஈடுபட்டால் போராட்டம் மேற்கொள்வோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க பேருந்துகளை இயக்கும்போது செல்ஃபோன்களை பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திய அளவில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ள நிலையில் செல்ஃபோன் பயன்பாட்டால்தான் அதிக விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் பல குறிப்பிடுகின்றன.
அது மட்டுமின்றி அதிகாரிகள் தங்கள் பணியை முறையாக செய்ய அனுமதிக்காமல், பேருந்து ஊழியர்கள் இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுவதால் இதுபோன்ற கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அசாமில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; 5 லட்சம் பேர் பாதிப்பு