அய்சால்: மிசோரம் தேசிய விலங்கு நோய்களுக்கான பாதுகாப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட திசு மற்றும் சீரம் மாதிரிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்குச் சாதகமானவை என்பதை மிசோரம் கால்நடை பராமரிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு மிசோரமின் லுங்லே மாவட்டத்தில் உள்ள லுங்சென் கிராமத்தில் முதன்முதலில் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.
நேற்று (ஏப்ரல் 19) மட்டும் மிசோரம் மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 65 பன்றிகள் இறந்துள்ளன என மிசோரம் கால்நடை பராமரிப்புத் துறை உறுதிப்படுத்தியது, இதையடுத்து இந்த நோயால் இதுவரை மொத்தமாக 920 பன்றிகள் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.
விலங்குகள் தொற்று மற்றும் தொற்று நோய்களைத் தடுத்தல் கட்டுப்படுத்துதல் சட்டம் 2009 இன்கீழ் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் அண்டை நாடான மியான்மர் ஆகிய நாடுகளும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ளன. இது மிகவும் கொடிய வைரஸ் தொற்று நோயாகும். வல்லுநர்களின் கூற்றுப்படி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த வைரசால் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிகிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய கிழக்கு மாநிலங்களில் இதுபோன்ற தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அரசுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.