டெல்லி: அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவருக்கு டெல்லி அசோகா சாலையில் வீடு சொந்தமாக உள்ளது. இந்நிலையில், நேற்று (பிப்.19) மாலை 5.30மணி அளவில் ஓவைசியின் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இதில் அசாதுதீன் ஓவைசியின் வீட்டு ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. சம்பவம் தொடர்பாக பாராளுமன்றம் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் அசாதுதீன் ஓவைசி புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓவைசியின் வீட்டில் சோதனை நடத்தி கல்வீச்சு சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து பேசிய அசாதுதீன் ஓவைசி, "நள்ளிரவு 11.30 மணி அளவில் டெல்லி வீட்டிற்கு வந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியது பணியாள் மூலம் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கற்கள் சிதறிக் கிடந்தன.
வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவது நான்காவது முறையாகவும். சுற்றுவட்டாரத்தில் ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படாததால் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்த ஏதுவாக உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு நிலவும் இடத்தில் இது போன்ற செயல்கள் நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்ய வேண்டும்" என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது மகள்.. புது சாதனை படைத்தார்!