ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் கிஷான் லால் சோனிக்குச் சொந்தமான மாதா ராணி நகைக்கடை அமைந்துள்ளது. கிஷான் திருமணத்திற்கான ஆர்டர்களுக்காக நிறைய நகைகளை செய்து கடையில் வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஏப்.24) மாலை வழக்கம் போல கிஷான் கடையைத் திறந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் கடைக்குள் புகுந்து தங்க நகைகளை கொடுக்கும்படி அவரை மிரட்டியுள்ளனர்.
இதற்கு அவர் மறுக்கவே, அந்தக் கும்பலில் உள்ள நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கிஷான் செய்வதறியாது நிற்கவே, அக்கும்பல் அவரது வாயை டேப்பால் ஒட்டி தங்கள் கைவரிசையைக் காட்டினர்.
அதாவது கடையில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்ட அக்கும்பல், இதுதொடர்பான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமலிருக்க சிசிடிவி கேமராவையும், கிஷானின் செல்போனையும் உடைத்து விட்டு தப்பினர்.
தகவலறிந்த எஸ்.எச்.ஓ. கோட்வாலி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.