கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேரந்த 17 வயது சிறுமி கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு தனது 13 வயதில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை நிர்பயா குழந்தைகள் நல மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், அச்சிறுமியை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திலிருந்து வெளியே வந்த அச்சிறுமிக்கு மீண்டும் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திலிருந்து வெளியே வரும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு தொடர் கேள்விக்குறியாகிவரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா? அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறதா என மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.