டெல்லி: இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டில் உள்ள 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை ஒன்றிய நிதியமைச்சக செலவினத்துறை நேற்று(ஆக.30) வழங்கியது. இந்த மானியம் 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்படி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2021-22ஆம் ஆண்டில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.25,129.98 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், துப்புரவு, குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த மானிய உதவியில் 60 விழுக்காடு, தொகுப்பு மானியமாகும். மீதமுள்ள 40 விழுக்காடு மானியத்தை, சம்பளம் தவிர, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பஞ்சாயத்து அமைப்புகளின் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மானியத்தை மாநில அரசு 10 நாட்களுக்குள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்.
தாமதமானால், மாநில அரசுகள் மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு நேற்று ரூ.799.8 கோடியும், இந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.2783.23 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொது விநியோகத்திட்ட மானியமாக ரூ. 400 கோடி ரூபாய் விடுவிப்பு!