பிகார்: பிகார் மாநிலம், பெட்டயாஹ் நகரைச் சேர்ந்த லோஹா சிங் என்ற மெக்கானிக், கரோனா ஊரடங்கு காலத்தில் யூ-ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, குறைந்த உற்பத்தி விலையில், புதிய வாகனம் ஒன்றை வடிவமைக்க முயற்சித்துவந்துள்ளார். அதன்படி, 150 சிசி இருசக்கர வாகன இன்ஜினைக் கொண்டு, சிறிய ஜீப்பை வடிவமைக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார். குறுகலான சாலைகளில் கூட செல்லும் அளவுக்கு தனித்துவமான ஜீப்பை மும்முரமாக உருவாக்கி வந்தார்.
இந்த நிலையில், யூ-ட்யூப் வீடியோக்களின் உதவியோடு தற்போது சிறிய ஜீப்பை உருவாக்கிவிட்டதாக லோஹா சிங் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகன இன்ஜினில் இயங்கும் இந்த ஜீப்பில் 4 இருக்கைகள், 6 கியர்கள், செல்ஃப் ஸ்டார்ட், பவர் டில்லர் சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளதாகவும், இந்த பவர் டில்லர் சக்கரங்கள் தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் கூட ஜீப்பை சீராக ஓட வைக்கும் என்றும் தெரிவித்தார்.
![லோஹா சிங் வடிவமைத்த மினி ஜீப்...](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/140422-spl-bh-bet-bike-made-jeep-pkg-bh10058_14042022152932_1404f_1649930372_93.jpg)
இந்த ஜீப் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்றும் தெரிவித்தார். ஒரேநேரத்தில் 4 பயணிகளையும், 10 குவிண்டால் எடையையும் சுமக்கும் திறன் கொண்டது என்றும், இதன் உற்பத்தி விலை ஒன்றரை லட்சம் ரூபாய் என்றும் லோஹா சிங் தெரிவித்தார்.
தனது ஜீப்பை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவதாகவும், ஆனால் தனது முதல் வாகனம் என்பதால், இதனை தர மறுத்துவிட்டேன் என்றும் தெரிவித்தார். அதேநேம், எதிர்காலத்தில் நிறைய ஜீப்களை தயாரித்து விற்பனை செய்யும் திட்டம் உள்ளது என்றும் லோஹா சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஐசிடிஇ விதிகள் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கட்டுப்படுத்தும்