ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர், அவர்களை விரட்ட முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடமிருந்த ஒரு ஏ.கே. ரகத் துப்பாக்கி மற்றும் இரண்டு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும், அங்கிருந்து தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் குறித்தும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.