கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பொதுமுடக்கமும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வெளிமாநிலங்களில் தங்கி பணிபுரிந்துவரும் குடிபெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் செய்திகள் தற்போது அதிகரித்துள்ளன.
அந்தவகையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குடிபெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியவண்ணம் உள்ளனர்.
கண்காணிக்க அறிவுறுத்தல்
அதன்படி, மும்பையின் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து குடிபெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவருகின்றனர்.
லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தின் ரயிலிலிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குடிபெயர் தொழிலாளி ஒருவர் கூறுகையில், "இந்த ரயில் கோரக்பூர் வரை செல்லும். கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக நாங்கள் இந்த மும்பை நகரிலிருந்து வெளியேறுகிறோம்" என்றார்.
இச்சூழலைக் கருத்தில்கொண்டு, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், குடிபெயர் தொழிலாளிகளிடத்தில் நிலவும் அச்சத்தைத் தணிப்பது குறித்தும், கோவிட்-19 நிலைமையைக் கண்காணிப்பது குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அச்சம் - சட்டவிரோத பயணம்
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் உள்ளனர்.
எவ்வாறாயினும், நமது மாநில அரசுக்கு அத்தகைய திட்டங்கள் (பொதுமுடக்கம்) எதுவும் இல்லை. வணிகங்கள் அல்லது சிறு வணிகர்கள் நஷ்டம் அடைவதை நாங்கள் விரும்பவில்லை.
பெரும்பாலானோர் இதுவரை கோவிட்-19 சோதனை மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
நாங்கள் இந்த நிலைமையைக் கவனித்துக்கொண்டு வருகிறோம். நமது மாநிலத்திற்குத் திரும்பவருபவர்கள் 'கரோனா எதிர்மறை' என்ற மருத்துவ அறிக்கையோடு வர வேண்டும்" என்றார்.
குழப்பங்களைத் தவிர்க்கவும்
மற்றொரு குடிபெயர் பணியாளர் கூறுகையில், "நாங்கள் எங்கள் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தோம். அங்கு தற்போதுவரை இரவு ஊரடங்கு உள்ளது.
பொதுமுடக்கத்திற்கு முன்னதாகவே குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது, நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் செல்கிறோம். திரும்ப எப்போது வருவோம் என்று எங்களால் கூற முடியாது" என்றார்.
கோவிட் பாதிப்பு காரணமாக பெருநகர மும்பை மாநகராட்சியில் வார இறுதி நாளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்தப் பொதுமுடக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 ஆகும். தற்போது ஒன்பது லட்சத்து 10 ஆயிரத்து 319 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் குணமடைந்தோர் விழுக்காடு 91.67 ஆக உள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 56 ஆயிரத்து 286 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 130 ஆக இருக்கிறது. நேற்று மட்டும் 376 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அங்கு ஐந்து லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மும்பை
கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 938 ஆக இருக்கிறது. அதேபோல் புனேயில் 12 ஆயிரத்து 90 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் 9.4 கோடி
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 9.4 கோடியைத் தாண்டியது.
சரியாக நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, கரோனா மொத்த பாதிப்பின் எண்ணிக்கை ஒன்பது கோடியே 40 லட்சத்து 96 ஆயிரத்து 689 ஆகும்.