நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம், நாஷிக் மாவட்டத்தில் முண்டேகான் என்ற இடத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று(ஜன.1) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டதோடு, அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.
இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயன நிறுவனம் என்பதால் தீயை அணைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
பின்னர் தீயைக் கட்டுப்படுத்திய வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்த சுமார் 20 பேர் நாஷிக்கில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சுமார் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து பாய்லர் வெடித்து நடந்தது போல தெரியவில்லை என்றும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு