கோல்காபூர்: மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தீப் அன்னசோ பாட்டீல் (36). இவரது மனைவி ராஜ்ஸ்ரீ(32). இந்த தம்பதியருக்கு சமித் (8) என்ற மகனும், ஷ்ரேயா (14) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கால்வாய்க்கு மனைவி மற்றும் குழந்தைகளை சந்தீப் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென மனைவி, குழந்தைகளை கால்வாய்க்குள் தள்ளிவிட்டு சந்தீப் தப்பியதாக தெரிகிறது. எனினும் நல்வாய்ப்பாக சிறுமி ஷ்ரேயா கால்வாயில் நீந்தி காயங்களுடன் கரை திரும்பினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், ஷ்ரேயாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தமது தாயும், சகோதரரும் கால்வாயில் விழுந்துவிட்டதாக ஷ்ரேயா கூறினார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கால்வாயில் இருந்து ராஜ்ஸ்ரீ மற்றும் சமீத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சந்தீப்பை போலீசார் தீவிரமாக தேடினர். கர்நாடகா மாநிலம் போஜ் பகுதியில் அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது பேன்ட் பாக்கெட்டில் குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள் இருந்தன. சந்தீப் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்; 4 வயது மகனை கொலை செய்த தாய்