நந்தண்ட்: மகாராஷ்டிராவில் வேற்று சாதி இளைஞருடனான காதலை முறிக்க மறுத்ததாக, பெற்ற மகளையே பெற்றோர் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தண்ட் மாவட்டம் மஹிபா கிராமத்தைச் சேர்ந்தவர், சுபாங்கி. மருத்துவக் கல்லூரி மாணவியான சுபாங்கிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தருணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுபாங்கியின் காதல் விவகாரம் அவரது வீட்டிற்குத் தெரிய வந்த நிலையில், தருணுடனான காதலை கைவிடுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. பெற்றோரின் பேச்சை மீறி சுபாங்கி காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சுபாங்கிக்கும், வேறொரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதை அறிந்து கொண்ட சுபாங்கி நிகழ்வின்போது மணமகன் வீட்டார் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தன் காதல் குறித்து எடுத்துக் கூறி திருமணத்தை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
ஊரார் முன் மகள் அவமானப்படுத்தியதாக எண்ணிய பெற்றோர், ஆள் அரவம் இல்லாத நேரமாக பார்த்து வீட்டில் இருந்த சுபாங்கியை கடுமையாகத் தாக்கி அடித்து ஆணவக்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஊராருக்கு சுபாங்கி இறந்த தகவல் தெரிந்தால் போலீஸ் வழக்கு என பிரச்னைகள் உருவாகும் என்று கருதி, தங்கள் வயலில் சுபாங்கியின் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளனர்.
மேலும் சாம்பல் கூட தடயமாக மாறி விடக் கூடாது என எண்ணி அருகில் உள்ள கிராமத்தில் சுபாங்கியின் சாம்பல் மற்றும் எலும்புத் துண்டுகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தூக்கி வீசியதாக சொல்லப்படுகிறது. சுபாங்கியின் மரணம் ஊராருக்கு தெரியாது என்றும், போலீஸ் வழக்கில் இருந்து தப்பிவிட்டதாகவும் எண்ணி உறவினர்கள் சுற்றியுள்ளனர்.
நாளடைவில் சுபாங்கி காணாமல் போனதைக் கண்டறிந்த கிராம மக்கள், சுபாங்கி குறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திடுக்கிடும் உண்மைகளை வெளிக் கொணர்ந்தனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சுபாங்கியின் தந்தை, தாய்மாமன், உள்ளிட்ட 5 பேரை வழக்குத் தொடர்பாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவோம் - சிபிஐ(எம்) அறிவிப்பு