இந்திய கடற்படையில் எம்ஹெச்-60ஆர் (MH-60R Multi Role Helicopters (MRH)) ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடமிருந்து பெறும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் உள்ள நார்த் ஐலேண்ட் கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. இதனை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்தூ பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், அமெரிக்க கடற்படை விமான குழு தளபதி கென்னத் விட்செல் மற்றும் இந்திய கடற்படை பணியாளர்துறை துணைத் தலைவர் ரன்வீத் சிங் ஆகியோர் இடையே ஹெலிகாப்டர் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டது.
எம்ஹெச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் பிரபல பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது எல்லாவிதமான வானிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்த வகையைச் சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை இந்தியா அமெரிக்க அரசிடமிருந்து வாங்கியுள்ளது. மேலும், இந்த ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கென சில பிரத்யேகமான சிறப்பு வசதிகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்படவுள்ளன. அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர்களை இயக்க இந்திய கடற்படையைச் சேர்ந்த குழு அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.