புதுச்சேரி: ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட சாலைப் பகுதிகளில் சாலையோரக் கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று (ஆக.12) பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற அலுவலர்கள் முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளும் அலுவலர்களும் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் சமாதானப்படுத்தியும், கேட்காத வியாபாரிகள் திடீரென்று ஜேசிபி எந்திரத்தின் அடியில் படுத்தும், பெண் வியாபாரிகள் சாலையில் அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி அரசையும், அலுவலர்களையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து காவலர்கள் வியாபாரிகளை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். இதனால் காவல் துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ஜேசிபி எந்திரம் மூலம் ஆம்பூர் சாலையில் இருந்த பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர்.
மேலும் இதுதொடர்பாக பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஆம்பூர் சாலை ஆக்கிரமிப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.