பெங்களூரூ: இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் சில பேரின் சிந்தை முதிர்வென்பது மிகவும் மோசமாகவுள்ளதாகவும், தாங்கள் பார்க்கும் எதையும் நம்பிவிடும் அளவிற்கு பலவீனமாகவும் உள்ளதாக கர்நாடகா உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் சில முகப்புகள், ட்வீட்கள் மற்றும் லிங்குகளை ஒன்றிய அரசு நீக்கச் சொன்ன வழக்கு விசாரணையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நீதிபதி கிருஷ்ணா திக்ஷீட் கூறுகையில், “இந்த இணையத்தைப் பயன்படுத்தும் சமூகத்தாரின் சிந்தை முதிர்வென்பது மோசமாகவே உள்ளது. இவர்கள் எதையும் நம்பிவிடுகிறார்கள்” என்றார். ட்விட்டர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அசோக் ஹரனஹல்லி, “நமது கருத்திற்கு எதிராக உள்ளது என்பதற்காக ஒரு வெளிநாட்டு ட்விட்டர் முகப்பை தடை செய்வது சரியா...? சில ட்வீட்கள் அவதூறாக இருக்கலாம், ஆனால் அதற்காக அந்த முகப்புகளை தடை செய்யலாமா..? எனக் கேள்வி எழுப்பினார்.
”மக்கள் தான் சரியான தகவலைக் கலைய வேண்டும். அனைவரும் செய்தித் தாள்களைப் படிப்பதில்லை. நிறைய பேர் சமூக ஊடகங்களை குறிப்பிட்ட தேவைக்காகவே பயன்படுத்துகின்றனர். ஆகையால், ஒரு தகவல் பரவுவதையே தடுப்பது தவறு” என கூறி தனது வாதத்தை முடித்தார்.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வழக்கின் எதிர் தரப்பினரின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த எதிர்தரப்பு மனு, தடை செய்யப்பட்ட ஒரு ட்விட்டர் முகப்பின் உரிமையாளரால் வழங்கப்பட்டது. ”இப்படி நீங்கள் மனு அளித்தால், தடை செய்யப்பட்ட லட்சக்கணக்கான பேரும் எதிர் மனு தாக்கல் செய்வார்கள்.
அதற்கு நீதிமன்றம் போதாது” எனக் கூறிய நீதிமன்றம், பின்னர் அபராதமாக ஒரு பெருந்தொகையை விதித்து மனுவை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமாஜ்வாதி மூத்த தலைவர் அசாம் கானிற்கு மூன்றாண்டு சிறை