ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜோரி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹவில்தார் மந்தீப் சிங், லேன்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய்கள் ஹரிகிருஷ்ணன் சிங், சேவேக் சிங் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதில் தேபாஷிஷ் பஸ்வால் மட்டும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் உயிரிழந்த மற்ற நான்கு வீரர்களும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அருகில் உள்ள காடுகளில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக உள்ளனரா என அறிய நாய்கள் படை மற்றும் ட்ரோன்களை கொண்டு ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜோரி மற்றும் பூஞ்ச் எல்லையோர மாவட்டங்கள் தீவிர உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பிம்பர் காலி - பூஞ்ச் இடையிலான சாலை மூடப்பட்டு உள்ளன. மேந்தார் வழியாக பூஞ்ச் மாவட்டத்திற்கு செல்லுமாறு வாகன ஓட்டிகளை ராணுவத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மே மாதம் கோவாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஷர்தாரி கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க : ட்ரம்ப் முதல் ரஜினி வரை! ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ட்விட்டர் பயனர்களின் ப்ளூ டிக் நீக்கம்!