மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் அதிகாலை 3.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 31 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய் பவானி கட்டிடம் தரை தளத்துடன் ஏழு மாடிகளைக் கொண்டது. இங்கு ஏற்பட்ட தீ விபத்து லெவல் 2 என மும்பை தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்த தீ விபத்தில் 51 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் தரைத்தளத்தில் இருந்த சில கடைகளும், அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3.00 மணியளவில் ஒரு பெரிய குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதாகவும், அந்த சத்தம் கேட்டு விழித்து வெளியே வந்து பார்த்த போது கட்டடத்தில் தீ எரிந்து கொண்டிருந்தது. பின்னர் வீடுகளில் இருந்து அனைவரும் வெளியேறினோம் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தள பதிவில், “மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். காயமடைந்த நபருக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தீபக் கேசர்கர் மற்றும் மங்கள்பிரபா லோதா ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தை தொடர்ந்து தெலங்கானாவிலும் அறிமுகமானது காலை உணவுத் திட்டம்.. முழு விபரம்!