கவுகாத்தி: சமீபத்தில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா, “பிப்ரவரி 3 முதல் 1,000க்கும் மேலான கணவர்கள் கைது செய்யப்பட உள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். எனவே 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்த அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை உடனடியாக முடுக்கி விடப்படும். மேலும் யாராவது குழந்தை திருமணம் செய்திருந்தால், அவர்கள் நேரடியாக சிறையில் தள்ளப்படுவார்கள், அவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். அவ்வாறு கைது செய்யப்படும் கணவரின் மனைவிகளுக்கு ‘ஒருனோடோய்’ (Orunodoi) திட்டம் மூலம் இலவச அரிசி உடனடியாக வழங்கப்படும்” என கூறியிருந்தார்.
இதன்படி தீவிர தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவினர் ஈடுபட்டனர். இதன் மூலம் பாடட்ராவா, மோரிகான், திங், லஹாரிகட், மஜூலி மற்றும் சாரிதுவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தை திருமணம் செய்த 50 கணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக துப்ரி மாவட்டத்தில் 370 வழக்குகளும், குறைந்தபட்சமாக ஹிலாபண்டி மாவட்டத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!