கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி வி.புரானிக் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "எனது தந்தை அரசு வேலையில் இருக்கும்போது உயிரிழந்துவிட்டார். அப்போது கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும்போது, எனக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காகவே அரசு வேலை வழங்குவதில் என்னை பரிசீலனை செய்ய மறுக்கின்றனர்" என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் நாகப்பிரசன்னா, "கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும்போது, மகனின் திருமண நிலை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், மகளின் திருமண நிலையும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
ஏனென்றால், திருமணமாகிவிட்டதால் மகள் அந்த குடும்ப உறுப்பினர் இல்லை என்று நம்மால் கூற முடியாது. திருமணமான மகன்கள் மட்டுமே குடும்பத்தின் ஒரு அங்கமாகத் தொடர்கிறார்கள் என்று சட்டம் கூறுவதாக நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், இது குறித்து இருக்கும் சட்டப்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற நீதிபதி, கர்நாடக சிவில் சர்வீசஸ் விதிகள், 1996 இலிருந்து "திருமணமாகாதவர்" என்ற வார்த்தையை நீக்கவும் உத்தரவிட்டார்.
முன்னதாக, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த அசோக் ஆதிவேப்பா மடிவாலா என்பவர் குடாச்சி கிராமத்திலுள்ள விவசாய உற்பத்தி குழு அலுவலகத்தில் செயலாளராக இருந்தார். அவர் பணியில் இருக்கும்போதே உயிரிழந்ததார்.
இதனால் கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவரது மகள் புவனேஷ்வரி வி.புரானிக் வேளாண் சந்தைப்படுத்தல் துறையின் இணை இயக்குநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், புவனேஷ்வரி திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று இணை இயக்குநர் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்