பெலகாவி: சமூக வலைதளங்களில் தகவல்கள் பரிமாறப்படுகிறதோ, இல்லையோ... மீம்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக 2K கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவது போலவும், ஆனால் 90's கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது போன்றும், 1990களில் பிறந்த இளைஞர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் மீம்ஸ்கள் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். இந்த விவகாரம் தற்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், சுயேச்சையாக போட்டியிடும் இருவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஆரபவி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் குருபுத்ரா கெம்பன்னா குல்லூர், கோகாக் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் புந்தலீலா குல்லூர் ஆகிய இருவரும் சகோதரர்கள் ஆவர். தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் தங்கள் தொகுதியில் திருமணம் ஆகாத இளைஞர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். 'மணமகன் - மணமகள் திருமண திட்டம் 2023' என இதற்குப் பெயரும் வைத்துள்ளனர். இத்திட்டம் இளம்பெண்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளைக் கிணறு, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை, வீடில்லாதவர்களுக்கு புதிய வீடு கட்ட ரூ.3-ரூ.5 லட்சம், வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Karnataka Elections: பெங்களூருவில் 2 நாட்களுக்கு பிரதமர் மோடி ரோட் ஷோ