மும்பை (மகாராஷ்டிரா): புல்தானா மாவட்டத்தின் அரசின் திட்டமான 'ஷாசன் அப்லியா தாரி' திட்டத்தை தொடங்கி வைத்த பின் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவரை மராத்தா சமூகத்தினருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
நேற்றைய முன்தினம் (செப்.1) ஜல்னா, துலே-சோலாப்பூர் சாலையில் உள்ள அந்தர்வாலி சாரதியில் மராத்தா சமூக இட ஒதுக்கீடு கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை கும்பலைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வன்முறையின் காரணமாக சுமார் 40 காவல் துறையினர் மற்றும் பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர் மற்றும் போராட்டக்காரர்களால் பல பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், வன்முறையில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மராத்தா சமூக இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் இன்று நடைபெற இருந்த ஜன்சம்வாத் யாத்திரையை காங்கிரஸ் கட்சியனர் ரத்து செய்ததாக மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சம், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: Sonia Gandhi : சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி சாரதி பகுதியில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பின் காவல் துறையினர் தடியடி நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மராத்வாடாவில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று (செப் 3) நடைபெற விருந்த ஜன்சம்வாத் யாத்திரையை ரத்து செய்தது.
மேலும், இதேபோல் 8 மாவட்டங்களிலும் யாத்திரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை மீண்டும் எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறியுள்ளார்.
சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “ஜல்னா பகுதியில் நடைபெற்ற தடியடி சம்பவம் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், ஜல்னா பகுதியில் நடந்த அனைத்தையும் நாங்கள் பார்த்தோம்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது எதிரிகளை தாக்குவதுபோல் இருந்தது. மிக முக்கிய கோரிக்கைக்காக போராட்டம் நடைபெற்றது. முதலமைச்சருக்கு தெரியாமல் காவல் துறையினர் தடியடி நடத்தியிருக்க மாட்டார்கள். எனவே, மாநில அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறினாார்.
மேலும், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறும்போது, ஜல்னா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினரின் நடவடிக்கை உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்கட்சிகள், ஆளும் கட்சிக்கு எதிராக மாற்ற நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் கடந்த 40 வருடங்களில் சரத் பவார் இந்த விவகாரம் குறித்து பேசியது இல்லை. மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை தாக்கி பேசினார்.
இதையும் படிங்க: ‘இந்திய மாநிலங்களின் மீதான தாக்குதல்’ - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!