கட்சிரோலி : மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி (Gadchiroli) மாவட்டம் தனோரா தாலுகா (Dhanora taluka) முரும்கான் (Murumgaon) மர்தின்டோலா (Mardintola forest)அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது காடுகளில் பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதையடுத்து காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் சத்திஸ்கர் மாநில அரசுகளுக்கு மாவோயிஸ்கள் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கு தடையாக இருந்து வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல்கள். சத்தீஸ்கர் மற்றும் கட்சிரோலியில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன.
இந்த என்கவுன்ட்டருக்கு தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். அப்பகுதியில் இருந்து சிஆர்பிஎஃப் மற்றும் சிறப்புப் படைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
மேலும் இந்த என்கவுன்ட்டருக்கு காரணமானவர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா காவல்துறையினர் கட்சிரோலி காடுகளில் நடத்திய என்கவுன்ட்டரில் சுமார் இருபத்தி ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்தப் பகுதி மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ளது. மேற்கூறிய கடிதத்தை பத்ராத்ரி கொத்தகுடம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்ட மாவோயிஸ்ட் பிரிவு குழு எழுதியுள்ளது.
இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் 26 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!