கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தில் 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனக் காவல் துறைத் தரப்பில் நவம்பர் 13 அன்று தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் வனப் பகுதிகள் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ளன.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி (Gadchiroli) மாவட்டம் தனோரா தாலுகா (Dhanora taluka) முரும்கான் (Murumgaon) மர்தின்டோலா (Mardintola forest) அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாகக் காவலர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
முக்கியத் தலைவர் கொலை
இந்தத் தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது காடுகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதையடுத்து காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில், நீண்ட காலமாகத் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார் எனவும், கொல்லப்பட்ட 27 மாவோயிஸ்ட்டுகளில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 27 மாவோயிஸ்ட்டுகள் சுடப்பட்டதைக் கண்டித்து, வரும் 27ஆம் தேதி ஆறு மாநிலங்களுக்கு முழு அடைப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அழைப்புவிடுத்துள்ளது.
மிரட்டல் விடுத்த மாவோயிஸ்ட்
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) செய்தித் தொடர்பாளர் அபய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கிறோம் எனவும், 27 பேர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப்படும் என்றும் மிரட்டல்விடுத்துள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 2 முதல் 8ஆம் தேதிவரை மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ வாரத்தை மாவோயிஸ்ட்டுகள் கடைப்பிடிப்பார்கள். அதற்கு முன் நவம்பர் 27ஆம் தேதிக்கு முழு அடைப்பை அறிவித்துள்ளனர். இதனால், காவல் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.