கோழிக்கோடு: மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அழிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், கேரளாவிலும் அதுதான் நடக்கலாம் என்றும் தாமரச்சேரி சீரோ மலபார் கத்தோலிக்க பேராலயத் தலைவர் பிஷப் ரெமிஜியோஸ் இஞ்சனானியில் கூறி உள்ளார்.
இன்று மணிப்பூர் என்றால், எதிர்காலத்தில் அதாவது நாளை கேரளாவாக மாறும். 48 மணி நேரத்தில் 200 தேவாலயங்கள், கலகக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகளின் மவுனம் பயமுறுத்துவதாக மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோழிக்கோடு எம்பி எம்.கே.ராகவன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் இவ்வாறு பேசி உள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: ‘இதனால் திமுகவினருக்கு மட்டுமே நன்மை’ - ஜெயக்குமார்
தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு, எதிராக அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தாமரச்சேரி பிஷப் வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்த 'தாக்குதல்கள் அனைத்தும் முன்கூட்டியே, திட்டமிட்டு செய்யப்பட்டவையாக உள்ளன என்றும், 48 மணி நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் மவுனம் அச்சமூட்டுவதாக உள்ளதாக' என பிஷப் குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே, மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலய பேராயர் பாசலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ் கடந்த மாதம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அங்கு பலமான இராணுவ படைகளின் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரைத்து உள்ளார். இந்த வன்முறைச் சம்பவங்கள், இரு பழங்குடியினருக்கு இடையிலான இனக் கலவரமாக மட்டும் பார்க்கபடாமல், சிறுபான்மை மதத்தினரை துன்புறுத்தும் வகையிலேயே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பழங்குடி மக்களுக்கு இடையே நடைபெறும் தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் கலவரம் நிகழ்ந்த இடத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.