இம்பால் : மணிப்பூரில் மீண்டும் நடந்த கலவரத்தில் வீடுகள், பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.
கடந்த மே மாதம் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து கொண்டு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மணிப்பூரில் கலவரச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மாநில அரசு திணறி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தொடர்ந்து கலவரம் வெடித்து வருவதாக கூறப்படுகிறது. மொர்ரே மாவட்டத்தில் போராட்ட கும்பல் நடத்திய தாக்குதலில் பல்வேறு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மியான்மர் எல்லையை ஒட்டி உள்ள மாவட்டமான மொர்ரேவில் போராட்டக் கும்பல் பொது மக்கள் வீடுகள், பாதுகாப்பு படையினரின் வாகன்ங்கள், இரண்டு பேருந்துகள் என பல்வேறு சொத்துகளை தீ வைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கங்க்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் இரண்டு பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பீகாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி! என்ன காரணம்?