திருவனந்தபுரம்: மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் முரளிதரன். இவருக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே உள்ளது. இந்த வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் வேலை பார்க்கும் நபர், வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார்.
அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் ரத்தக் கறையும் படிந்திருந்தது. கார் பார்க்கிங் பகுதியில், கற்கள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் முரளிதரன் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக, கன்னூர் மாவட்டம் பையனூர் பகுதியை சேர்ந்த மனோஜை போலீசார் கைது செய்தனர். தம்பனூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை பிடித்து விசாரித்ததில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். அமைச்சர் வீட்டின் மீது ஏன் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்