டெல்லி: டெல்லியில் கடந்த 12ஆம் தேதி, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புனேவுக்கு புறப்படவிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு, அதிலிருந்த 182 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமானத்திலும், பயணிகளின் உடைமைகளிலும் சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு இருப்பதாக வந்த செல்போன் அழைப்பை வைத்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
குருகிராமில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் டிக்கெட் ஏஜெண்டாக பணியாற்றி வரும், துவாரகாவைச் சேர்ந்த அபினவ் பிரகாஷ்(24) என்ற இளைஞர் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.
பிரகாஷின் நண்பர்களான ராகேஷ் மற்றும் குணால் செஹ்ராவத் ஆகியோரின் பெண் தோழிகள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புனே செல்லவிருந்ததாகவும், தனது நண்பர்கள் அவரது பெண் தோழிகளுடன் கூடுதலாக நேரம் செலவிட விரும்பியதால் விமானத்தை தாமதப்படுத்த இவர்கள் திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, பிரகாஷ் வெடிகுண்டு புரளியை கிளப்ப, விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்துள்ளனர். தப்பியோடிய பிரகாஷின் நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு