சிகார்: ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் நேற்று (டிச.3) இரண்டு ரவுடி கும்பல் இடையே மோதல் ஏற்பட்டது. பிரபல ரவுடியான ராஜு தீத் அவரது வீட்டு வாசலில் வைத்து மற்றொரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோஹித் கோதாரா என்ற ரவுடி இந்த கொலையை செய்ததாகவும், தங்களது கும்பலைச் சேர்ந்த ஆனந்த்பால், பல்வீர் பானுடா ஆகியோரைக் கொன்றதற்குப் பழி தீர்க்கவே இதனைச் செய்ததாகவும் தெரிகிறது.
இந்த கேங்ஸ்டர் கும்பல் மோதலில் அப்பாவி தந்தை ஒருவரது உயிரும் பறிபோனது. இந்த கும்பல் தாக்குதல் நடந்தபோது, சிகார் பகுதியை சேர்ந்த தாராசந்த் கட்வசரா என்பவர், அதே பகுதியில் நீட் பயிற்சி மையத்திலிருந்த தனது மகளை அழைத்து வருவதற்காக காரில் சென்றிருந்தார்.
அவர் பயிற்சி மையத்திற்கு வெளியே காத்திருந்தபோது, ராஜு தீத்தை கொன்றுவிட்டுத் தப்பியோட முயன்ற ரவுடிகள், தாராசந்த்திடம் கார் சாவியைக் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, உடனடியாக அவரை சுட்டுக் கொன்றுவிட்டு, காரை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த தாராசந்த்தின் மகள், தந்தை இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இறந்த தந்தையின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். அந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய டிஜிபி உமேஷ் மிஸ்ரா, "ரவுடி ராஜு தீத் கொலை செய்யப்பட்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த கொலையை ரோஹித் கோதாரா மற்றும் அவனது கூட்டாளிகள் செய்திருக்க வாய்ப்புள்ளது. உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு... திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி உயிரிழப்பு...